கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்ட அனைத்து ரயில்களும், இன்று முதல் வழக்கமான ரயில்களாக இயக்கப்படும் என்று, ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கமான ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு மே 12ந் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
20 மாதங்கள் கடந்த நிலையில், சிறப்பு ரயில்கள் என்ற அடையாளம் நீக்கப்பட்டு, கொரோனாவுக்கு முந்தைய நிலவரப்படி வழக்கமான ரயில் தடங்களில் ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால், சிறப்பு ரயில்களுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில் வே அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதை உடனடியாக அமல்படுத்தும்படி மண்டல ரயில் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அது நடைமுறைப்படுத்த ஓரிரு நாள் ஆகலாம் என்றும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதனால், சிறப்பு ரயில்கள் மற்றும் விடுமுறைக்கால ரயில்கள் என்ற அடையாளம் 1700க்கும் மேற்பட்ட ரயில்களில் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்ட சாதாரண கட்டணத்திலான முன்பதிவு இல்லாத பாஸஞ்சர் பயணிகள் ரயில்களும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பழனி-மதுரை, கோவை பொள்ளாச்சி , தூத்துக்குடி -திருச்செந்தூர் திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.