தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், வயல்களில் தேங்கிய நீர் வடியாததாலும் பல மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.
திருவாரூர், குடவாசல், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு, மூவலூர், மல்லியம் ஆகிய ஊர்களில் வயல்களில் நீர் தேங்கியதால் இளம் நெற்பயிர்கள் அழுகிப்போனதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் புதுப்பள்ளி, விழுந்தமாவடி ஆகிய ஊர்களில் வயல்களில் வரப்புக் கூடத் தெரியாத அளவுக்கு நீர் தேங்கிக் கடல்போல் காட்சியளிக்கிறது.
வேதாரண்யத்தில் ஆறுகளிலும், கால்வாய்களிலும் ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளதால் வெள்ளம் வடிவது தாமதமாவதாகவும், இதனால் ஐயாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் நிலை உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பூதேரிபுல்லவாக்கத்தில் ஏரி நிரம்பி விளைநிலத்தில் தண்ணீர் பாய்ந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைந்துள்ள நெற்பயிர்கள் முளைத்து வீணாகும் நிலை உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்கூடல் என்னும் ஊரில் பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் விளை நிலத்தில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் சுமார் 100 ஏக்கர் பரப்பில் இளம் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.