உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மறைமுக தேர்தல் நடத்தப்படாத பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படுமென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தேர்தல் ஆணையத்திடம் கருத்துக்களை பெற்று தெரிவிப்பதாக மாநில தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, தகுதியான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மறைமுக தேர்தலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், மறைமுக தேர்தலையும், தேர்தல் நடைபெறும் வளாகங்களிலும் நடக்கும் நடவடிக்கைகள் முழுவதையும் வீடியோ பதிவு செய்து 60 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.