மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் மழை பெய்வதால் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்து, பயிர்கள் காக்க நடவடிக்கைகளை எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இக்குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், இக்குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று, பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு முதலமைச்சருக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.