சரியான பொறுப்புக்களில் நேர்மையான நபர்களை நியமிக்கும் போதே தவறுகள் தவிர்க்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, முறைகேடு நடந்ததாக கூறப்படும் கீழக்கரை, ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு, தேர்தலின்போது வாக்குச்சாவடியில் முறைகேடு நடந்தால், தேர்தல் ரத்து செய்யப்படும் சூழலில், தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டும் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்போது, பல லட்ச மாணவர்களின் எதிர்காலம் குறித்த விடைத்தாள்களுக்கு பாதுகாப்பு அளிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.