வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாகவும், அது இன்று மாலை புதுச்சேரிக்கு வடக்கே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் உருவாகி வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களை நெருங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை நீடிப்பதாகவும், ஆனால் கடலூருக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
மேலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் போது வலுவிழந்து தாழ்வு பகுதியாக மாறும் என்றும், கடலுக்குள் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நிலப்பரப்பில் மழைப்பொழிவே அதிகம் இருக்கும் என்று கூறியுள்ள புவியரசன், காற்றின் வேகம் குறைவாகவே இருக்கும் என்று கூறினார்.