"ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது" என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்றும் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டியிருப்பது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைகள் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், கலைகளின் சிறந்த வடிவங்களில் ஒன்றான திரைப்படம் மக்களின் மனங்களை பண்படுத்த வேண்டுமே தவிர வன்மத்தை விதைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.