திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் வாகனத் தணிக்கையின்போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
பேருந்து நிலையம் அருகே ஆலங்காயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற காவலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உமாபதி தடுத்து நிறுத்தியும் நிற்காமல் சென்றார் என்று கூறப்படுகிறது.
பின்னாலேயே துரத்திச் சென்று அவரை மடக்கிய எஸ்.எஸ்.ஐ உமாபதி, வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றார். மணிகண்டன் அதனைத் தடுத்ததால் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் எஸ்.எஸ்.ஐ உமாபதியின் கன்னத்தில் திருப்பி அறைந்தார்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மணிகண்டனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.