திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 4 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுபாடுகளுடன் இந்த திருவிழா நடந்து வந்தது. 6 ம் திரு நாளான இன்று மாலை 4:30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். பின்னர் கோயில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாத நிலையில், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை முகப்பில் மூன்று பக்கமும் சுற்றி தகரகத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார லீலை கோவில் வளாகத்தில் உள்ள திருவாட்சி மண்டபத்தில் கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்க எளிமையாக நடைபெற்றது.
மதுரை பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்குப் பின் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடாகி சூரனையும் பத்மாசூரனையும் சம்ஹாரம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.