தமிழ்நாட்டில் அதிகனமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் உள்ள பெரியார் நகர் துணை மின் நிலையத்திற்குள் மழை நீர் புகுந்த நிலையில், அதனை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை நீர் தேங்கிய பகுதிகளில், எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும், அப்பகுதிகளிலும் மழை நீர் வடிந்த பிறகு மின் விநியோகம் சீராகும் என தெரிவித்த அமைச்சர், சென்னையிலுள்ள 223 மின் நிலையங்களில் இருந்தும் சீரான முறையில் தடையின்றி மின் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறினார். இதனை அடுத்து, மின்சாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரளித்தால் தீர்வு காண எளிதாக இருக்கும் என குறிப்பிட்டார்.