நீடித்த தலை வலி மற்றும் தலைவலியுடன் சேர்ந்த வாந்தி, முகம் மற்றும் கை - கால்கள் மரத்துப்போவது, கண்பார்வை குறைவு, வலிப்பு இவையெல்லாம் மூளையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள் என மூளை புற்றுநோய் நிபுணர் விஜய் சுந்தர் தெரிவித்தார்.
உலக மூளைப் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 6 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மூளைப் புற்று நோயில் இருந்து மீண்டவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும், பாதிப்பின் போது தாங்கள் உணர்ந்தவற்றையும் பகிர்ந்து கொண்டனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மூளை புற்றுநோய் நிபுணர் விஜய் சுந்தர், தொடக்க நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்தால் விரைவில் குணப்படுத்த முடியும் என்றும் மூளை புற்றுநோயில் 130 வகையான நோய்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.