முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, மூர்த்தி ஆகியோர் தேக்கடிக்குச் சென்று அங்கிருந்து படகில் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றனர். தொடர்ந்து அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு, அணையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பேபி அணை, சுரங்கப் பகுதி, மதகுகள் ஆகிய இடங்களையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். பேபி அணையைப் பார்வையிட்ட போது, அதனைப் பலப்படுத்தும் பணிகள் குறித்தும், மதகுகளை ஆய்வு செய்த போது அதன்மூலம் கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறித்தும் அமைச்சர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வள ஆணையத்தின் ரூல்கர்வ் முறைப்படி நவம்பர் 10 வரை அணையின் நீர்மட்டத்தை 139 புள்ளி 50 அடியாக வைத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
மேலும் நவம்பர் 30ஆம் நாளில் இருந்து அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதன் அடிப்படையிலேயே தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பேபி அணையைப் பலப்படுத்திய பின்னர் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.