முல்லைப் பெரியாறு அணைக்குத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்குக் கேரள அமைச்சர் ரோசி அகஸ்டின் சென்றுவந்ததும், அக்டோபர் 29ஆம் நாள் கேரளத்துக்கு மதகு வழியாக நீர் திறந்ததும் தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, மூர்த்தி ஆகியோர் தேக்கடிக்குச் சென்று அங்கிருந்து படகில் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றனர்.
அவர்களுடன் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சென்றனர். அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு, அணையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார்.
இன்றைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் 138 புள்ளி 8 அடிக்குத் தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு ஆறாயிரத்து 117 அடியாகும். அணையில் இருந்து தமிழகத்துக்குக் குகைப்பாதை வழியாக இரண்டாயிரத்து 305 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.