புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிகக் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி ஆகியவற்றின் காரணமாக மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு நாட்களில் டெல்டா மாவட்டங்கள், கடலூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
நவம்பர் 7ஆம் நாள் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாகத் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 13 சென்டிட்டர் மழை பதிவாகியுள்ளது.