சென்னை சின்னமலையில் சாலையில் இருந்த பள்ளத்தால் இளைஞர் விபத்தில் சிக்கி பலியான விவகாரத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு விளக்கம் கேட்டு சென்னை போக்குவரத்து காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நங்கநல்லூரைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்ற அந்த இளைஞர், பைக்கில் அலுவலகத்திற்கு சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நிலையில், அவர் மீது பக்கவாட்டில் சென்ற அரசுப் பேருந்து ஏறி, இறங்கியது.
இளைஞர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
விபத்து நடந்ததற்கு சாலையில் இருந்த பள்ளம் தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த அந்த பள்ளம் குறித்து ஏற்கனவே தங்களது கவனத்திற்கு தகவலோ, புகாரோ வந்ததா? அப்படி இருந்தால் ஏன் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை? பள்ளத்தை சரி செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறி ஏன் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.