தமிழ்நாடு முழுவதும் ஏழாம் கட்டமாக இன்று ஐம்பதாயிரம் இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 11 மணி நிலவரப்படி 2.61 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐந்து முறை மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. மது அருந்துவோரும் இறைச்சி உணவு உண்போரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குவதாகக் கருத்து நிலவியதால் கடந்த வாரம் சனிக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதேபோல் இன்றும் தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
சென்னையில் மட்டும் 1,600 முகாம்களில் தடுப்பூசி போடப்படுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் தடுப்பூசி போடும் பணியில் நலவாழ்வுத் துறைப் பணியாளர்கள், குழந்தைகள் மையப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 45 இலட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 621 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாமை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 871 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. அதிக எண்ணிக்கையிலானோர் தடுப்பூசி போட்டுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திச் சிறப்பிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் 618 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்குக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று 1392 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி மையங்களில் மாநகராட்சி ஆணையரும், நலவாழ்வுத் துறை அதிகாரிகளும் முகாம்களை ஆய்வு செய்தனர்.