தீபாவளி பண்டிகையன்று கிருமிநாசினி பயன்படுத்திவிட்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என தமிழக பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தீபாவளியை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதற்கான வழிமுறைகளை பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. பட்டாசுகளை திறந்தவெளியில் வைத்து வெடிக்கவும், எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது என்றும் வலியுறுத்திய பொதுசுகாதாரத்துறை, குழந்தைகள் தனியாக வெடிக்காமல் பெற்றோர்களுடன் வெடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சுவாசக் கோளாறு உள்ளவர்கள் கவனமாக இருக்கும்படியும், மின் கம்பங்கள் அருகே பட்டாசு வெடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட துணை மருத்துவமனைகள், பொது மருத்துவமனைகள் அனைத்தும் 24 மணிநேரமும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.