ஈரோட்டில், திருமணத்திற்கு பெண் பார்ப்பதாக கூறிய நண்பரிடம், கட்டிய மனைவியையே வரன் தேடும் பெண் போல பேச வைத்து, 12- லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா ஒரு மாற்றுத்திறனாளி. ராஜாவுடன் பணியாற்றி வரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் திருமணத்துக்காக பெண் தேடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தனக்குத் தெரிந்த பெண் ஒருவர் உள்ளதாக கூறி, சமூக வலைத்தளத்தில் இருந்து ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராஜா அவருக்கு காண்பித்துள்ளார்.
திருமண ஆசையில் இருந்த ராஜாவின் நண்பர், புகைப்படத்தைப் பார்த்ததும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, ராஜா தன் மனைவி நித்யாவை அந்த பெண் போல நண்பரிடம் பேச வைத்து உள்ளார். தனது பெயரை மாற்றிப் பேசிய நித்யா, தான் ஒரு மருத்துவ கல்லூரி மாணவி என்றும் கூறி உள்ளார். சில நாட்கள் போனிலேயே அவரை பேசி மயக்கிய நித்யா, படிப்புச் செலவுக்குப் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார்.
மருத்துவப் படிப்புக்கு லட்சங்களில் செலவாகும் என நித்யா கூறியதை நம்பி, தன்னிடமிருந்த 8 லட்ச ரூபாயோடு, ஈரோட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடமிருந்து 4 லட்ச ரூபாய் வரை வாங்கி நித்யா குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார் ராஜாவின் நண்பர். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த அவர், நித்யாவை நேரில் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதை ஏற்கனவே எதிர்பார்த்து இருந்த நித்யா, அதன் பிறகு தனது மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ராஜாவின் நண்பர், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் இது பற்றி புகார் அளித்தார். அவர்கள் ராஜாவைப் பிடித்து விசாரித்தபோதுதான் அவரது மனைவியை வைத்தே போனில் பேசவைத்து மோசடி செய்தது தெரியவந்தது. நித்யா முன் ஜாமீன் பெற்ற நிலையில், ராஜாவை போலீசார் கைது செய்தனர்.