திருச்சியில் 37 வயது காதலியை வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் நபருக்கு திருமணம் செய்து வைத்து, ரகசிய குடித்தனம் நடத்திய கல்லூரி துணை முதல்வரை கடத்திச்சென்ற கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி பணம் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சி கருமண்டபம் வசந்த் நகரைச் சேர்ந்தவர் விமல் ஆதித்யன். தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் ஒழுங்கீன செயல் காரணமாக கல்லூரி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது.
இதையயடுத்து தற்போது அவர் வேறொரு தனியார் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே பணியாற்றிய கல்லூரியில், தன்னுடன் பணியாற்றிய சென்னையை சேர்ந்த 37 வயது பெண்ணுடன் விமல் ஆதித்யன் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது
இந்நிலையில் தனது காதலிக்கு, பேராசிரியர் விமல் ஆதித்தன், மேட்ரி மோனியல் மூலம் வரன் தேடி, துறையூரை சேர்ந்த சசிகுமார் என்பவரை நிச்சயித்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணமும் செய்து வைத்துள்ளார்.
சசிக்குமார் திருமணத்திற்கு முன்பு கனடாவில் பணிபுரிந்து வந்ததால் அவர் மீண்டும் கனடா சென்று விடுவார் என்ற நினைப்பில் இந்த காரியத்தை செய்துள்ளார். ஆனால் சசிகுமார் வெளிநாடு திரும்பி செல்லாத நிலையில் அவ்வபோது விமல் ஆதித்தன், ஏதாவது ஒரு காரணம் கூறி காதலி வீட்டுக்கு சென்று ரகசிய சந்திப்பை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக தனிமையில் இருக்கும் வீடியோ காட்சிகளை தனது மனைவியின் செல்போனில் பார்த்த சசிகுமார், அந்த வீடியோக்களை தனது செல்போனுக்கு மாற்றி எடுத்துக் கொண்டார். திருமணம் என்ற பெயரில் தனது வாழ்க்கையையே பாழுங்கிணற்றில் தள்ளிய விமல் ஆதித்யனுக்கு தக்க பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளார். தன்னுடைய தம்பி மற்றும் நண்பர்கள் சிலரை சேர்த்து கொண்டு விமல் ஆதித்யனை கடத்தி சென்று ஒரு இடத்தில் கட்டிபோட்டு அடித்து உதைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்துபோன விமல் ஆதித்யன் தனது குடும்பத்தாருக்கும், மனைவிக்கு தெரியாமல் முதலில் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். முதலில் பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த கும்பல், விமல் ஆதித்யனை விடாமல், அவரும் காதலியும் ஒன்றாக இருக்கும் வீடியோவை காட்டி மேலும் 15 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என மிரட்டி ஆதித்யனை அடித்து துவைத்துள்ளனர்.
அடி விழுகின்ற வேகத்தை பார்த்து கலங்கிபோய், தன்னை கொலை செய்து விடுவார்களோ ? என்ற பயத்தில் , தனது மனைவியிடம் நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் ஒப்பித்த விமல் அதித்யன், தன்னை காப்பாற்றுமாறு செல்போனில் கதறியுள்ளார்.
அவரைத் தேற்றிய மனைவி தன்னிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சொத்து பத்திரங்களை கொண்டு சென்று சசிகுமாரிடம் கொடுத்து, கணவரை உயிரோடு விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். ஆயினும் அந்தக் கும்பல் மசியவில்லை.
இதையடுத்து விமல் ஆதித்யன் மனைவி தனது கணவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்.
கடத்திப் பணம் பறித்த துறையூரைச் சேர்ந்த சசிகுமார், திருச்சி மிளகுபாறையைச் சேர்ந்த பிரசாந்த், லாசர் ஆரோக்கியராஜ் ஆகிய மூன்று பேரை சுற்றிவளைத்து, அவர்களிடம் இருந்து விமல் ஆதித்யனை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் என்பன உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.