இறக்குமதி காருக்கான நுழைவு வரி செலுத்துவது குறித்த வழக்கில், நீதிபதியின் கருத்துகள் தன்னை புண்படுத்தியதுடன், குற்றவாளிபோல காட்டியுள்ளதாக நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு, நுழைவு வரி விதிக்க தடைகோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததோடு, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.
இதையடுத்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அபராதம் விதித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கடின உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்தது தேவையற்றது என்றும் 2 கோடி ரூபாய் கூட அபராதம் செலுத்த தயார்.
ஆனால், எதிர்மறை கருத்தை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.