விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாகக் கூறி வட்டாட்சியரின் காருக்கு இளைஞன் ஒருவன் தீ வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம் மூடப்பட்டிருந்த நிலையில், வட்டாட்சியரின் பொலீரோ கார் கண்ணாடிகள் ஏற்றப்பட்டு, கதவுகள் பூட்டப்பட்டு போர்ட்டிகோ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மதியம் பனிரெண்டரை மணியளவில் அந்தக் கார் தீப்பற்றி எரிவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. பொதுமக்கள் உதவியுடன் போலீசார் தீயை அணைத்தனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சுத்தியலோடும் பெயிண்ட்டுடன் கலக்கப்படும் “தின்னர்” திரவத்தோடும் அங்கு வரும் இளைஞன் ஒருவன், சுத்தியலைக் கொண்டு காரின் முன்பக்க பக்கவாட்டுக் கண்ணாடியை உடைக்கிறான்.
பின் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, தின்னர் திரவத்தை கார் சீட்டின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறான். இதில் காரின் உட்பகுதி முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. விசாரணையில் இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பதை அறிந்த போலீசார், அடுத்த அரை மணி நேரத்தில் அவனை கைது செய்தனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்குகின்றனர் என்றும் அந்த ஆத்திரத்தில் காரை கொளுத்தியதாகவும் கூறிய ரஞ்சித், ஏற்கனவே அலுவலகத்தைச் சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட ஜன்னல் கண்ணாடிகளையும் தாம்தான் உடைத்தேன் என்று தெரிவித்தாக போலீசார் கூறினர்.
அதேசமயம் விசாரணையின்போது ரஞ்சித்தின் நடவடிக்கைகள் மனநிலை பாதிப்புக்குள்ளானவர் போல் காணப்பட்டதாகக் கூறும் போலீசார், அவர் நடிக்கிறாரா அல்லது உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.