நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே, கொல்லி மலைச்சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
வடுகபட்டி கல்குவாரியிலிருந்து ஜல்லிக்கற்களை ஏற்றுக்கொண்டு, சரவணன் என்பவர் மலைச்சாலையில் டிப்பர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். சேத்தூர்ப்பட்டியில் ஜல்லிக்கற்களை இறக்கிய பின், மலையிலிருந்து கீழே வந்த போது, உறவினர்களான ராஜா மற்றும் தியாகராஜன் ஆகியோரையும் அவர் லாரியில் அழைத்து வந்துள்ளார்.
51வது கொண்டை ஊசி வளைவில் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் சரவணனுக்கு எலும்பு முறிவும், தலையில் பலத்த காயமும், மற்ற இருவருக்கு படுகாயமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.