தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு பேருந்து ஒன்றில் மழை நீர் அருவியாக கொட்டியதால் பயணிகள் நனைந்தபடியே பயணிக்கவேண்டிய நிகழ்வு அரங்கேறியது.
கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய சாலை பகுதியில் மழைநீர் வெள்ளமாக சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். ஜோதிலிங்கம் ஜவுளி கடை பகுதியில் உள்ள பாலத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள் அடைத்து கொண்டதால் மழைநீர் அருகில் உள்ள ஓடை பகுதிக்குள் செல்லமால் சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டது.
இளையரசனேந்தல் சாலை பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கபாலபகுதியில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாலத்தின் வழியாக ஊருக்குள் வர முடியமால் சுற்றி சென்ற நிலையில் சில வாகன ஓட்டிகள் ஆபத்தினை மீறியும் சுரங்க பாலத்தின் வழியாக வந்தனர்.
பசும்பொன் நகர், நடராஜபுரம் தெரு, ஜமீன்பேட்டை தெரு பகுதியில் மழைநீர் தேங்கியது மட்டுமின்றி வீடுகளுக்கும் சென்றதால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஊருக்குள் மழை வெள்ளத்தால் மக்கள் பரிதவித்த நிலையில் கோவில்பட்டி நகரில் இருந்து இயக்கப்பட்ட பல அரசுபஸ்களில் மழைநீர் உள்ளே அருவி போல கொட்டியதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்
ஓட்டை உடைசலான மேற்கூரை உடைய பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் இருக்கைகளை மட்டுமல்ல அதில் அமர இயலாமல் விலகி நின்ற பயணிகளையும் குளிக்கச் செய்தது..! அரசு பேருந்தில் பயணிக்க பெண்களுக்கு இலவசம் என்பதால் ஒழுகிய மழை நீரையும் பொருட்படுத்தாமல் பெண்கள் ஒழுகிய மழை நீரில் நனைந்தபடியே பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது
நகரப்பகுதிகளில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகளின் மேற்கூரை மட்டுமல்ல ஜன்னல் கண்ணாடிகளும் சரிவர இயங்காமல் பழுதாகி உள்ளதால் மழை காலத்தில் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாவதாக கூறப்படுகின்றது. அடுத்த சில வாரத்தில் பள்ளிகள் திறக்கபட உள்ள நிலையில் பருவமழை காலத்தை மனதில் கொண்டு ஓட்டையால் ஒழுகும் பேருந்துகளை சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!