தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பெருமன்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குச்சீட்டுக்களை பாதிரியார் ஒருவர் எடுத்துச் சென்றதாக வீடியோ வெளியான நிலையில், 3 ஓட்டில் வென்ற அணியினரின் வெற்றி செல்லாது என்று அறிவித்த பிஷப், தேர்தலையும் ரத்து செய்தார்
தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகள், போராட்டம் என்று ஒருபக்கம் நடந்தாலும் , மறுப்பக்கம் அனைத்தையும் மீறி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் ஊர்தோறும் தேர்தெடுக்கப்பட்டனர். அப்படித் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து பெருமன்ற நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலும் அண்மையில் நடந்தது.
டி.எஸ்.எப் பெருமன்ற நிர்வாகிகள் ஒரு அணியாகவும், எஸ்.டி.கே பெருமன்ற நிர்வாகிகள் மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தனர். இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை 20 ந்தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் டி.எஸ்.எப் அணியைச் சேர்ந்தவர்கள் 3 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வியாழக்கிழமை மாலை உற்சாகமாக பதவியும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது டி.எஸ்.அப் அணியின் ஆதரவாளரான பண்டாரவிளையைச் சேர்ந்த பாதிரியார் தாவீது என்பவர் எஸ்.டி.கே அணிக்கு விழுந்த வாக்குச் சீட்டுக்களை தனியாக எடுத்துச்சென்றதாக வீடியோ ஆதாரத்துடன் எஸ்.டி.கே. அணியினர் பிஷப்பிடம் புகார் அளித்தனர்.
அந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த பிஷப் தேவசகாயம், அந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக சுட்டிக்காட்டி தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் பதவிவேற்ற டி.எஸ்.எப் அணி நிர்வாகிகளின் வெற்றி செல்லாது என்றானது.