நெல்லில் ஈரப்பதம் தளர்வு குறித்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் 15 நாட்களில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தனர்.
மத்திய அரசின் விதிமுறைப்படி நேரடி கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
மழை பெய்து வருவதன் காரணமாக நெல்லை காய வைப்பதில் சிரமம் இருப்பதால், ஈரப்பதத்தில் 22 சதவீதம் வரை தளர்வு அளிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதன்பேரில் இந்திய உணவு கழகத்தின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தென் மண்டலத் துணை இயக்குநர் எம்.இசட். கான் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.