முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில், 23 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நிர்வகிக்கும் மதர் தெரசா அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் என 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 23 லட்சத்துக்கு 85 ஆயிரம் ரூபாய் பணம், 4 கிலோ 870 கிராம் தங்க நகைகள் மற்றும் 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டதாகவும், இதில் 23 லட்சத்து 82 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 19 ஹார்டு டிஸ்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.