தமிழக ஆளுநரின் மின்னஞ்சலைப் போலப் போலி மின்னஞ்சல், டுவிட்டர் கணக்குகள் உருவாக்கியோர் பற்றிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போலி மின்னஞ்சல் முகவரியைச் சிலர் உருவாக்கி ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களைக் கொண்ட மின்னஞ்சலை அனுப்புவது பற்றித் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
போலி மின்னஞ்சல் உருவாக்கிய குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து விசாரித்துச் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் அலுவலக மின்னஞ்சல் govtam@nic.in என்றும், டுவிட்டர் கணக்கு @rajbhavan_tn என்றும் குறிப்பிட்டுள்ளது. வேறு போலி மின்னஞ்சல்கள், போலி டுவிட்டர் கணக்குகளை மக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல் முன்பு ஆளுநர்களின் பெயரிலும், பிரதமர் அலுவலகத்தின் பெயரிலும் போலி மின்னஞ்சல் அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.