தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் ஆலோசனை நடத்தினார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், அறுவடை செய்த நெல்லைக் கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தினார்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி வழங்கவும் அறிவுறுத்தினார். வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கி வரும் நிலையில், பொதுமக்கள் 1070 என்கிற கட்டணமில்லாத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.