சேலத்தில் முன்னாள் கவுன்சிலருக்கு சொந்தமான வீட்டில் மசாஜ் செண்டர் நடத்தி வந்த பெண் கொலை செய்யப்பட்டு சடலத்தை சூட்கேஸில் மறைத்து வைத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அஸ்தம்பட்டி அடுத்த குமாரசாமிபட்டியை சேர்ந்தவர் நடேசன். ஆரம்பத்தில் திமுகவில் இருந்து தற்போது அதிமுகவில் இருக்கும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரான இவர் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார்.
இவரது வீட்டின் இரண்டாவது மாடியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகம்மத் சதாம் அவரது மனைவி தேஜஸ் மோண்டல் ஆகியோர் இரண்டு வீடுகளை வாடகை எடுத்து தங்கி இருந்தனர். கணவன் மனைவி இருவரும் சேலம் அழகாபுரம் மற்றும் பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் 3 இடங்களில் மசாஜ் சென்டர் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது.
கணவன் மனைவி ஒரு வீட்டிலும், மசாஜ் செண்டரில் வேலைபார்த்து வந்த பெண்கள் ஒரு வீட்டிலும் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மூன்று இளம்பெண்கள் தேஜஸ் மோண்டல் வீட்டிற்கு வந்து அவருடன் தங்கி மசாஜ் சென்டருக்கு வேலைக்கு சென்று வந்தனர்.இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு மனைவியிடம் சொல்லிவிட்டு கணவர் முகமது சதாம் சென்னைக்கு தொழில் சம்பந்தமாக சென்றார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பகலில் முகமது சதாம் ,வீட்டு உரிமையாளர் நடேசனுக்கு போன் செய்து தனது மனைவி தேஜஸ் மொண்டல் நீண்ட நேரமாக செல் போன் எடுக்கவில்லை. இதனால் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.
உடனே நடேசன் தேஜஸ் மோண்டல் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டு கதவு பூட்டுப்பட்டு இருந்தது . மசாஜ் பெண்கள் தங்கி இருந்த மற்றொரு வீட்டிற்கு சென்று பார்த்தார். அந்த வீட்டின் கதவும் வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது அந்த வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வந்தது . இதனால் அதிர்ச்சி அடைந்த நடேசன் உடனே இது குறித்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் துர்நாற்றம் வருவதாக தெரிவித்து புகார் செய்தார். இதையடுத்து அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீசார் நடேசன் வாடகைக்கு விட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தனர்.
அந்த அறையில் உள்ள படுக்கையறையில் இருக்கும் மேல் பகுதியில் பொருட்கள் வைக்கும் அலமாரியில் சூட்கேஸ் ஒன்று இருந்தது. இதிலிருந்து துர்நாற்றம் வீசியது. பின்னர் போலீசார் அந்த சூட்கேசை இறக்கி பார்த்தனர். அதில் தேஜஸ் மோண்டல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, சடலமாக சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அவர் இறந்து மூன்று அல்லது 4 நாட்கள் ஆகியிருக்கும் என போலீசார் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய், சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.பின்னர் கைரேகை நிபுணர்களும் அழைத்துவரப்பட்டு கைரேகை பதிவு செய்தனர். இந்த கொலையை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல்ஹோடா துப்பு துலங்க தனிப்படை அமைத்தார். இதில் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேஜஸ் மோண்டல் வீட்டில் தங்கி இருந்த 3 இளம் பெண்கள் மாயமாகி விட்டனர். இவர்கள் குறித்து தற்போது அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
ஊருக்கு போய் நான்கு நாட்கள் கழித்து போன் செய்தது ஏன் ? என்று தேஜஸ் மோண்டலின் கணவர் முகமத் சதாமிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேஜஸ் மோண்டலுடன் தங்கி இருந்த பெண்கள் கொலை செய்தார்களா ?அல்லது அவருக்கு அறிமுகமான வேறு யாரும் கொலை செய்தனரா? என்று தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.