தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு சுவாமி பிரியாவிடையுடன் குதிரை வாகனத்திலும்,பர்வதவர்த்தினி அம்மன் தங்க சிம்மவாகனத்திலும் எழுந்தருளினர். பின் மகர்நோம்பு திடலில் பர்வதவர்த்தினி அம்மன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து மகாதானபுரத்தில் பாணாசுரனை வேட்டையாடி வதம் செய்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடை அலம்புதல் மற்றும் பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி சேவை விமரிசையாக நடைபெற்றது. அம்மனும், சுவாமியும் பொற்றாமரை குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் உள் பிரகாரத்தில் வீதி உலா வந்து அம்பு எய்தல் விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அகத்தீஸ்வரம், அருப்புக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி,நாகப்பட்டினம், சீர்காழி மற்றும் காரைக்காலில் உள்ள கோவில்களிலும் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.