சரஸ்வதி பூசை, ஆயுத பூசை ஆகியவற்றையொட்டித் தமிழகக் கோவில்களில் சிறப்புப் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. பாடநூல்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றை வைத்துப் பள்ளிச் சிறார்களும் வழிபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் சரஸ்வதிக்கு என்று தனிக் கோவில் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தன் என்கிற தமிழ்ப் புலவருக்கு சரஸ்வதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்ற தலம் இது எனக் கூறப்படுகிறது. சரஸ்வதி பூசையையொட்டி இந்தக் கோவிலுக்கு வந்த பக்தர்கள் குறிப்பேடு, பாடப்புத்தகம், எழுதுபொருட்கள் ஆகியவற்றை சரஸ்வதி அம்மன் காலடியில் வைத்துப் பூஜை செய்து எடுத்துச் சென்றனர்.
தூத்துக்குடி சிதம்பரம் நகர் விநாயகர் கோவிலில் உள்ள சரஸ்வதி சன்னதியில் அம்மனுக்குப் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு அபிசேகம் செய்து சிறப்பு அலங்காரமும் பூஜைகளும் நடைபெற்றன. பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சரஸ்வதி தேவியை வழிபட்டுச் சென்றனர்.
நாகர்கோவில் வனமாலீஸ்வரர் கோவிலில் சரஸ்வதி பூஜையையொட்டிக் காலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கொரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்துச் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மோதிரத்தில் தேனைத் தொட்டு நாக்கில் எழுதியும், அரிசியில் விரல்களால் எழுதச் செய்தும் எழுத்தறிவித்தனர்.
ஆயுதப் பூசையையொட்டிச் சென்னை பல்லவன் இல்லம் அருகேயுள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் காலை முதலே பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். தங்கள் வாகனங்களுக்கு மாலை அணிவித்தும் தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளிலும் வணிக நிறுவனங்களிலும் இன்று ஆயுதப் பூஜை கொண்டாடப்படுகிறது. திருப்பூர் தேவம்பாளையத்தில் உள்ள பின்னலாடைத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் கொரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து ஆயுதப் பூஜை கொண்டாடப்பட்டது.