விஜயதசமி தினத்தனறு கோயில்களை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வருகிற வெள்ளிக்கிழமை விஜயதசமி தினத்தன்று கோயில்களை திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், அரசே முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், வருகிற வெள்ளிக்கிழமை விஜயதசமி வழிபாட்டிற்காக கோயில்களை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், நவம்பர் 1-ந் தேதி ஒன்று முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 300-க்கும் கீழ் குறைந்துள்ளதால், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும், ஆயுதபுஜை, தீபாவளி உள்ளிட்ட அடுத்தடுத்து வரும் பண்டிகை காலங்களில் பொது இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.