தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தமாக 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து 9 ஆயிரத்து 806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6 ஆயிரத்து 734 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளி முடிந்த பிறகு, பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு, நவம்பர் 5 முதல் 8-ஆம் தேதி வரை 4 ஆயிரத்து 319 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு என மொத்தம் 17 ஆயிரத்து 719 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சென்னையில் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.