கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்ததால் காமராஜர் சிலை தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி, அந்த சிலையை காங்கிரஸ் கட்சியினர் நீரால் கழுவி பாலால் அபிஷேகம் செய்து தீட்டுக்கழித்த சம்பவம் அரங்கேறியது. முன்னதாக முடிந்தால் தங்கள் அண்ணன் சீமானுக்கு வந்து சமாதி கட்டுமாறு நாம் தமிழர் தம்பிகள் காங்கிரஸ் கட்சியினருக்கு சவால் விடுத்தனர்.
காங்கிரசார் எதிர்ப்பு காரணமாக, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தக்கலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். கனிமவள கடத்தலுக்கு எதிரான கண்டன ஆர்பாட்டத்தில் சீமான் முன்னிலையில், மேடையில் மாஸ்க் கட்டிய மைக்கில் பேசிய தம்பிகள், கன்னியாகுமரிக்கு சீமான் வந்தால் சமாதி கட்டுவோம் என்று கூறியவர்கள் தைரியமிருந்தால் வந்து தொட்டுப் பாருங்கள் என ஆவேசமாக பேசி காங்கிரசாரை சீண்டினார்.
சீமான் பேசும்போது, தன்னை வைத்து பிழைப்பு ஓடும் என்பதால், தன்னை திட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் எனக் கூறினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்து நாம் தமிழர் கட்சியினர் சென்ற பிறகு, தக்கலையில் உள்ள காமராஜர் சிலை முன் குவிந்த காங்கிரசார், காமராஜர் சிலைக்கு சீமான் அணிவித்த மாலையை தூக்கி எறிந்தனர். பின்னர் சிலையை தண்ணீரால் கழுவி பாலபிஷேகம் செய்து புதிய மாலை அணிவித்தனர்