குளித்தலை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மகள் மற்றும் மகனை, 100 அடி ஆழ கிணற்றில் வீசிக் கொலை செய்த குடிகார தந்தையை போலீசார் கைது செய்தனர். சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். ஜேசிபி ஆபரேட்டராக வேலைபார்த்து வரும் இவருக்கு, பழனியம்மாள் என்ற மனைவியும், 4 1/2 வயதில் மகளும், 2 வயதில் மகனும் இருந்தனர்.
சனிக்கிழமை கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்து போட்டு விட்டு, முருகேசன் தனது 2 குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளான். ஆனால், மீண்டும் திரும்பி வரவில்லை. அவன் எங்கு சென்றான் குழந்தைகளுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் மனைவி பழனியம்மாள் தேடிவந்தார்.
இந்நிலையில், கழுகூர் ஊராட்சி புதூர் கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் தனக்கு சொந்தமான சுமார் 100 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் மோட்டார் போடுவதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளார். கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுமாறு அபயக் குரல் கேட்டுள்ளது.
உள்ளே எட்டிபார்த்த போது மோட்டாருக்காக பொருத்தப்பட்டிருந்த கயிற்றை பிடித்து தொங்கிக் கொண்டு நீரில் முருகேசன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தான்.
இதையடுத்து மணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்க உதவினார்.. அப்போது அவன், தனது 2 குழந்தைகளையும் இதே கிணற்றில் வீசி கொலை செய்து விட்டதாகவும், அவர்களது சடலம் கிணற்றுக்குள் கிடப்பதாகவும் கூறி அங்கிருந்தவர்களை அதிர வைத்தான்.
உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இரண்டு குழந்தைகளின் சடலத்தையும் கிணற்றுக்குள் இருந்து மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் தோகைமலை போலீசார், இரு குழந்தைகளின் சடலங்களையும் கைப்பற்றி குளித்தலை அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கணவர் முருகேசனை கொலை வழக்கில் தோகைமலை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அத்தை மகளை திருமணம் செய்து கொண்ட முருகேசனுக்கு தனது மனைவின் நடத்தையில் நீண்ட வருடங்களாக சந்தேகம் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. குடிபோதையில் வீட்டுக்கு வந்து படுத்து உறங்கிவிடுவதால் இந்த இரு குழந்தைகளின் பிறப்பின் மீதே சந்தேகம் கொண்டு மனைவியை அடித்து உதைப்பதை வாடிக்கையாக்கி உள்ளான். சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு குழந்தைகளையும் அழைத்துச்சென்று கிணற்றில் வீசிக்கொலை செய்த முருகேசன், தற்கொலை செய்து கொள்வதற்காக தானும் கிணற்றுக்குள் குதித்துள்ளான் .
குதிக்கும் போது கிணற்றுக்குள் உள்ள மோட்டார் குழாயின் மீது விழுந்து கை ஒடிந்ததால் வலி தாங்காமல் அருகில் இருந்த கயிற்றை பிடித்து தொங்கியபடி தண்ணீரில் நீந்தி உயிர் தப்பியதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளான்.
சந்தேக தீ பொல்லாதது.. அதுவும் மனைவி, கணவன் இடையே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டால் இருவரும் அமர்ந்து பேசி அதனை சரி செய்வதை விடுத்து குழந்தைகளை கொலை செய்தால் குடும்பம் அழிந்து விடும் என்பதற்கு மோசமான சாட்சியாகி இருக்கின்றது இந்த இரட்டை கொலை சம்பவம்.