சென்னையை அடுத்த ஒரகடம் அருகே டாஸ்மாக் ஊழியர் கொலையான சம்பவத்தில் காயமடைந்த சக ஊழியரின் உடலில் துப்பாக்கி தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை ட்ரோன்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 4ஆம் தேதி ஒரகடம் டாஸ்மாக் கடையில் அரங்கேறிய கொள்ளை முயற்சியில் கடை ஊழியர் துளிசிதாஸ் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் முதுகில் தோட்டாவுடன் தப்பிய இராமு என்ற சக ஊழியர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது முதுகிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் அந்த தோட்டா அகற்றப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூரில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கும் முயற்சி நடந்துள்ளது. கொள்ளையனை பொதுமக்கள் துரத்தியபோது, அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளான்.
அவன் டாஸ்மாக் கொள்ளையில் தொடர்புடையவனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், காட்டுப்பகுதியில் டிரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.