சென்னை மணலி எம்.எப்.எல் சந்திப்பு வழியாக துறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகளை மறித்துக் போட்டு, மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து வாகன ஓட்டிகளை மீண்டும் சங்கடத்திற்குள்ளாக்கி வருவதாக போக்குவரத்து காவலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 450 ரூபாய்க்காக செயற்கையாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் மாமூல் போலீஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அதிக பாரத்துடன் இயக்கப்படும் கண்டெய்னர் லாரிகள்..! மற்ற வாகன ஓட்டிகளுக்கு வழி விடாமல் இருவழிச்சாலையை ஆக்கிரமித்து விதியை மீறி சாலையில் நிறுத்தி வைக்கப்படும் கண்டெய்னர் லாரிகள்..!
வடசென்னை போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட மணலி விரைவுச்சாலையாக இருந்தாலும் சரி, எண்ணூர் துறைமுகம் விரைவுச்சாலையாக இருந்தாலும் சரி, தடையின்றி கண்டெய்னர் லாரிகள் செல்ல வேண்டுமானால் பாயிண்டுக்கு 100 ரூபாயை, புரோக்கர்கள் மூலம் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்க வேண்டும் என்ற, எழுதப்படாத விதி, நீண்ட நாட்களுக்கு பின்னர், தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்திருப்பதாக லாரி ஓட்டுனர்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு பாயிண்டிலும் போலீசுக்கு பணம் கொடுக்கும் லாரிகள், 450 ரூபாய் மொத்தமாக கொடுத்தால் தடையின்றி துறைமுகம் நோக்கி பயணிக்கலாம், பணம் கொடுக்காத லாரி ஓட்டுநர்கள் ஒரு மணி நேரம் 2 மணி நேரம் அல்ல, நாள்கணக்கில் இலவு காத்த கிளிகளாக, சாலையின் ஒரு பக்கம் லாரியுடன் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுவதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர்..!
கண்டெய்னர் லாரிகளுக்காண இந்த செயற்கை போக்குவரத்து தடை ஒரு கிலோ மீட்டர் இரு கிலோ மீட்டர் அல்ல, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீள்வதுதான் வேதனையிலும் வேதனை...!
பணம் வாங்கிக் கொண்டு லாரிகளை அனுமதிக்கும் போது இரு வழி சாலையை முழுமையாக லாரிகள் ஆக்கிரமித்துக் கொள்ள மற்ற வாகன ஓட்டிகள் காரணமே தெரியாமல் லாரிகளின் பின்னால் மணிக்கணக்கில் காத்து நிற்கும் அவலம் ஏற்படுகின்றது.
தேர்தலுக்கு முன்பாக இங்கு பணியில் இருந்த 30க்கும் மேற்பட்ட பல்வேறு போக்குவரத்து போலீசார் பணி மாறுதல் செய்யப்பட்டதால், லாரிகளை மறித்து வழிப்பறிபோல பணம் பெறும் வசூல் அட்டகாசம் இல்லாமல் இருந்தது. தற்போது, மீண்டும் தீபாவளி வசூல் வேட்டையை தொடங்கி விட்டதாக, கொளுத்தும் வெயிலில் லாரியுடன் காத்திருந்து நொந்து போய் பசியால் வாடும் லாரி ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
லாரி ஓட்டுநர்களின் குற்றச்சாட்டு குறித்து, எம்.எப்.எல் சந்திப்பில் லாரிகளை மறித்து வைத்திருந்த காவலர் ஆல்பின் என்பவரிடம் கேட்ட போது அவரிடம் உரிய பதில் இல்லை..
இதையடுத்து, வேக வேகமாக மறித்து போட்டிருந்த லாரிகளை அவர் அங்கிருந்து செல்ல அனுமதித்தார். அதேபோல எர்ணாவூர் சந்திப்பில் லாரிகளை மறித்துபோட்டதோடு, விதியை மீறி ஏறி வரும் லாரிகளை கையூட்டு பெற்றுக் கொண்டு அனுமதித்த குற்றச்சாட்டுக்குள்ளான, உதவி ஆய்வாளர் துரைச்சாமியும் உரிய பதில் சொல்ல இயலாமல் ஓட்டம் பிடித்தார்.
வட சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர் கூறுகையில், சென்னை துறைமுகத்திற்குள் 4 கப்பல்கள் ஒரே நேரத்தில் வந்துவிட்டதாகவும், உள்ளே சரக்குகளை கொண்டு செல்லும் லாரிகள் உள்ளே செல்ல இயலாத நிலை இருப்பதால் லாரிகள் சாலையில் வரிசையாக போக்குவரத்துக்கு இடையூறின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் கூறியபடி துறைமுகத்திற்குள் ஒவ்வொரு லாரியாக தடையின்றி செல்கின்றது. உள்ளே எந்த இட நெருக்கடியும் இல்லை.
மேலும் லாரிகளை மடக்கி வைத்திருந்த போக்குவரத்து போலீசார், கேமராவை கண்டதும் லாரிகளை உடனடியாக சாலையில் செல்ல அனுமதிப்பதை பார்த்தால் இதன் பின்னணியில் இருப்பது யார்? என்ற கேள்வி எழுகின்றது.
அதே நேரத்தில் காலை மாலை நள்ளிரவு என முப்பொழுதும் தீராத வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக லாரி ஓட்டுநர்களால் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள போக்குவரத்து காவலர்களை அடையாளம் கண்டு, கூண்டோடு இடமாற்றம் செய்து, சங்கடமான சாலை பயணத்தை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
சென்னை துறைமுகம் எண்ணூர் சாலையில் கண்டெய்னர் லாரிகள் மறிக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அங்கு போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மாதவரம் - மஞ்சம்பாக்கம் விரைவுச்சாலை, எண்ணூர் விரைவுச் சாலை, சூரியநாராயண சாலை வழியாக சென்னை துறைமுகத்துக்குச் செல்லும் லாரிகளை மறித்து போக்குவரத்துக் காவலர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் பணம் கொடுக்காத லாரிகளை சாலையோரம் நிறுத்தி வைப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து வடசென்னை போக்குவரத்து துணை ஆணையர், போக்குவரத்து கூடுதல் ஆணையர், போக்குவரத்து உதவி ஆணையர் உள்ளிட்டோர் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.