காவிரி ஆற்றில், மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை உள்ள பல்வேறு இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி குழு நடத்திய ஆய்வில் காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்று நீர் மாசடைவதாக தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், கரூர், திருப்பூர் பகுதிகளில் இயங்கிவரும், சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளில் இருந்து, கழிவு நீர் ஆறுகளில் வெளியேற்றப்படுகிறதா என்பதை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் அடங்கிய 5 குழுக்கள் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி ஆற்றில் உயர் உலோகங்கள், பூச்சிக்கொல்லி, மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கலக்காமல் தடுக்கும் பொருட்டு, சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட பல்வேறு வல்லுநர்களின் ஆலோசனைகள் கேட்டுப் பெறப்பட உள்ளது.