வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணமலை மாவட்டங்களில் கனமழையும், வட மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளைய தினம் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் நகரின் சில பகுதிகளில் இரு நாட்களுக்கு இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும், தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.