தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65. இளையராஜாவின் இசையில் 90 களின் தொடக்கத்தில் உற்சாக வரிகளால் இளைஞர்களை ஆட்டம் போடவைத்து, கருத்தாழமிக்க வரிகளால் காயம்பட்ட இதயங்களை தாலாட்டிய கவிஞானின் திரைப்பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாடலாசிரியராக திகழ்ந்து வந்த கவிஞர் பிறைசூடன் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார் , அவருக்கு வயது 65.
கவியரசு கண்ணதாசனை குருவாக ஏற்றுக் கொண்ட பிறைசூடன் தமிழில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார். இளையராஜாவால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் பிறைசூடன்.
பிறைசூடன் வரிகளில் ராஜாதி ராஜா படத்தின் எவர்கிரீன் ஹிட் பாடலான மீனம்மா மீனம்மா..இன்றளவும் மனதில் நிற்கும் மெலடி. 90களின் தொடக்கத்தில் இளையராஜாவின் காதல் மெலடிகளில் பிறைசூடனின் கைவண்ணத்திற்கு தனி இடம் உண்டு.
மெலடி பாடல்களை போலவே பிறைசூடன் திரையில் எழுதிய உற்சாக பாடல்கள் இளைஞர்களை தரையில் ஆட்டம் போட வைத்தவை.
விஜயகாந்தின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப்படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம் பெற்ற ஆட்டமா தேரோட்டமா பாடல் பிறைசூடனால் தீட்டப்பட்டது.
சோலையம்மா திரைபடத்திற்கு எழுதிய உணர்ச்சிமிக்க வரிகளுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார்.
இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான், தேவா, எஸ்.ஏ. ராஜ்குமார் என ஏராளமான இசையமைப்பாளர்களிடம் பாடல் எழுதி இருந்தாலும் ஆன்மீகத்தில் சித்தர்வழிபாட்டை பின்பற்றி கம்பீரமான பேச்சாற்றலால், எதைபற்றியும் கவலை கொள்ளாத திரையுலக நக்கீரராக வலம் வந்தவர் கவிஞர் பிறைசூடன்
சென்னை நெசப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த கவிஞர் பிறைசூடன், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை பூர்வீகமாக கொண்டவர். மறைந்த கவிஞர் பிறைசூடனின் உடல் நெசப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மயானத்தில் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கவிஞானி என்று எம்.எஸ். விஸ்வநாதனால் பட்டம் சூட்டப்பட்ட பிறைசூடன் உடலால் மறைந்தாலும் அவரது கருத்தாழம் மிக்க வரிகளால் ரசிக மனங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.