கோவில் நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டின் பகுதியை 4 வாரங்களில் அப்புறப்படுத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
177 ஏக்கரில் செயல்படும் அந்த நிறுவனம், 21 ஏக்கர் கோவில் நிலத்தை பயன்படுத்தியதற்காக 2 கோடியே 75 லட்சம் ரூபாய் குத்தகை தொகையை செலுத்த வேண்டுமென 2013 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் பிறப்பித்திருந்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை நீதிபதி எம்.சுந்தர் தள்ளுபடி செய்தார்.
குத்தகை காலம் முடிந்த பிறகு நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததற்காக 9 கோடியே 50 லட்சம் ரூபாயை பூந்தமல்லி காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால ஸ்வாமி கோவில் நிர்வாகங்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
வருவாய் துறைக்கு ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.