கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீர் கழிவுநீர் கலந்து நுரை பொங்க, பொங்க வருவதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கனமழையை பயன்படுத்தி தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலந்துவிடுவதால், கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்க பொங்க தண்ணீர் ஓடுகிறது.
தண்ணீரின் மேற்பரப்பில் பஞ்சை கொட்டியது போல் குவியல் குவியலாக நுரை தேங்கி நிற்கிறது. கடந்த ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுபடி தமிழகம் மற்றும் கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தென்பெண்ணை ஆற்றின் நீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் எதுவும் தற்போதுவரை வெளியாகாத நிலையில், ரசாயன கழிவுகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.