தமிழகம் முழுவதும் 4 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 24,760தடுப்பூசி முகாம்கள் மூலம் 25 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 1,600 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தேனி மாவட்டம் கம்பத்தில் மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர், தமிழக கேரள எல்லையான குமுளி சோதனை சாவடியில், கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு எவ்வாறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 79லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேற்கு மாவட்டங்களில் தொற்று குறைவதற்கான அறிகுறி தென்பட தொடங்கியுள்ளது எனவும், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 90சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எனவும் அவர் கூறினார்.