தீரன் திரைப்படத்தில் வருவதுபோல லாரியில் வந்து தமிழகத்தில் கொள்ளையடித்து வந்த வடமாநில கொள்ளையர்களை, போலீசார் கைது செய்தனர். வடநாட்டில் இருந்து லாரியில் வந்து, ஆந்திராவில் காரைத் திருடி, தமிழ்நாட்டில் கொள்ளையை அரங்கேற்றியவர்களிடமிருந்து வெல்டிங் மிஷின், கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் கிராமத்தில் உள்ள ஆக்ஸிஸ் ஏடிஎம் மையத்தில் புகுந்த கொள்ளையர்கள், சிசிடிவி கேமரா மீது ஸ்ப்ரே அடித்து, ஏடிஎம் மெஷினை கேஸ் வெல்டிங் மூலம் கட்டிங் செய்ய முயற்சித்துள்ளனர்.
இதுகுறித்து வந்த ரகசிய தகவலின் பேரில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பியுள்ளார். போலீசார் வருவதைப் பார்த்ததும், கொள்ளையர்கள் டாடா இண்டிகா காரில் தப்பி சென்றனர்.
இதையடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காரின் பதிவு எண் கொண்டு விசாரித்ததில், ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே திருடப்பட்ட கார் என தெரியவந்துள்ளது. கடந்த 16ஆம் தேதி இரவு, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பெருங்களத்தூர் பகுதியிலுள்ள ஆக்சிஸ் ஏடிஎம் மையத்தில் 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் தனிப்படை போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது.
சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆராய்ந்ததில் இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட கொள்ளையர்கள் ஒரே நபர்கள் என்றும், இரு சம்பவங்களின்போதும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று அருகே நிறுத்தப்பட்டிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைகளில் கவனத்தை திருப்பிய போலீசார், எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லாரியை மடக்கிப்பிடித்தனர். அதில் இருந்த 4 நபர்களின் முகச்சாயல் மற்றும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த விதத்தால், அதற்கேற்ப போலீசார் விசாரணை நடத்தியபோது, இரண்டு ஏடிஎம் கொள்ளை சம்பவங்களையும் நிகழ்த்தியவர்கள் என தெரியவந்துள்ளது.
ஹரியானா மாநிலம் மேவாத் பகுதியை சேர்ந்த ஹர்ஷாத், லுக்மன், சாஜித் மற்றும் ஒரு சிறுவனையும் கைது செய்து ஏடிஎம் மிஷின்களை உடைக்க பயன்படுத்திய வெல்டிங் மிஷின், கேஸ் சிலிண்டர் மற்றும் 45 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
கொள்ளையர்கள் ஏற்கெனவே கொள்ளையடித்த பணத்தை ஹரியானாவுக்கு உறவினர்களுக்கு அனுப்பிவிட்ட நிலையில், அதை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.