மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது திமுக அரசின் கடமை என்றும், அந்த கடமையை நிறைவேற்றியே தீருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாமல் இருந்த சூழலில், 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொண்டார். பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.
கிராமங்கள்தான் இந்தியா என மகாத்மா காந்தி கூறியதை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், அவருக்கும் மதுரை மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். பாப்பாபட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் எனக் கூறிய முதலமைச்சர், 23 லட்ச ரூபாய் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டித்தரப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
1921ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி மதுரை வந்திருந்தபோது தங்கியிருந்த, முதன்முதலில் அரையாடை புரட்சி செய்த வீட்டிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்றார். மேலமாசி வீதியில் அமைந்துள்ள, காதிகிராப்ட் நிறுவனத்தின் மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.