மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, அரசுப் பள்ளி தமிழாசிரியர் ஒருவர் தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்து மேஜையைத் தூக்கி வீசி ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் கிண்டல் செய்த மாணவர்களின் புகாரால், ஸ்டண்ட் மாஸ்டரான தமிழாசிரியர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கரப்பான் பூச்சி போல மல்லாக்க கிடக்கும் டேபிள் அருகே ஆந்திர ஆக்சன் ஹீரோ போல ஆவேசமாக நிற்கும் இவர்தான் தமிழ் ஆசிரியர் மகேந்திரன்..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மகேந்திரன். இவரை வியாழக்கிழமை பள்ளியில் சில மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேரை ஆசிரியர் மகேந்திரன் பிரம்பால் அடி பின்னி எடுத்ததாகக் கூறப்படுகிறது.
கிண்டல் செய்த மாணவர்களை விட்டுவிட்டு தமிழ் ஆசிரியர் தங்களை தவறுதலாக அடித்ததாக, மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர் கிளியனூர் ஊராட்சிமன்ற தலைவரும், பள்ளியின் கல்விக் குழுத் தலைவருமான முஹம்மது ஹாலீதுவை அழைத்துச் சென்று பள்ளி தலைமையாசிரியர் கலிவரதனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த தமிழாசிரியர் மகேந்திரன், தன்னை கிண்டலும் செய்துவிட்டு, தன் மீதே புகாரும் கொடுக்க சிபாரிசுக்கு சிலரை அழைத்து வந்திருப்பதைப் பார்த்து, மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த தமிழ் ஆசிரியர் மகேந்திரன், தலைமை ஆசிரியரின் மேஜையை அப்படியே அலேக்காக தூக்கி மல்லாக்கப் போட்டு மேஜைக் கண்ணாடியை உடைத்ததால், அங்கிருந்தவர்கள் மிரண்டு ஓடியதாகக் கூறப்படுகின்றது.
பள்ளியில் நடந்த இந்த திடீர் தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து, ஊர்மக்கள் அங்கு திரண்டதால் ஸ்டண்ட் மாஸ்டரான தமிழ் ஆசிரியர் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சிறைவைக்கப்பட்டார்.
தமிழ் ஆசிரியர் மகேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் அவரது கர்ப்பிணி மனைவியை தாக்கிய சம்பவத்தில் சிக்கி, மன்னிப்புக்கு பின்னர் நடவடிக்கையில் இருந்து தப்பியதாக ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்தார்
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் ஊர் மக்கள் கலைந்து சென்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் படிப்பை மறந்து ஆசிரியரை சீண்டினால் என்னமாதிரி விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!