நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. தேவதை பகுதியில் கடந்த ஏழு நாட்களாக ஆட்கொல்லி புலி ஒன்று மிகுந்த அட்டகாசம் செய்து வருகிறது.
ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட கால்நடைகள், 3 மனிதர்களைக் கொன்றிருந்த அந்த புலி, 4வதாக குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மங்கள பசவன் என்பவரை கொன்று தலை பகுதியை தின்றுள்ளது.
இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ள மக்கள் ஆட்கொல்லி புலியை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மசினகுடி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஏற்கனவே புலி நடமாட்டத்தால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகம் கேரளா கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.