அரசு முறைப் பயணங்களுக்காக முதலமைச்சரால் பயன்படுத்தப்படும் தமிழக அரசின் ஹெலிகாப்டரை, ஏர் ஆம்புலன்சாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அதனை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசிடம் உள்ள 2005ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412EP ((Bell 412EP)) ரக ஹெலிகாப்டர், 2019ஆம் ஆண்டு முதல் இயக்கப்படாமல் உள்ளது.
பேரிடர் காலங்கள், அவசர பயணங்களுக்கு பயன்படுத்தும் வகையில் இந்த ஹெலிகாப்டர் தயார் செய்யப்பட்டதாகும். இந்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து இந்த ஹெலிகாப்டரை ஆம்புலன்சாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.