அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம், 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை கேட்டதும் அவர் நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்த சம்பவமும் அரங்கேறியது.
1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள் தொடங்குவதாக கூறி தனது கணவர் நடத்தி வந்த அறக்கட்டளைகளுக்கு 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அரசு நிதியை ஒதுக்கீடு செய்ததாகவும், ஆனால் இந்த நிதியில் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யாமல் ஏமாற்றியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சண்முகம் ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, இந்திரகுமாரிக்கும், அவரது கணவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.
இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணனை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் சிக்கிய மற்றொரு நபரான கிருபாகரன் இறந்துவிட்டார். தீர்ப்பு அளிக்கப்பட்டதும் அதனை கேட்ட இந்திர குமாரி நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர், அவரை காவல்துறையினர் ஆறுதல்படுத்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.