தமிழ்நாட்டில் இருந்து முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
சேலத்தின் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் போயிங் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், போயிங் இந்தியா நிறுவன அதிகாரி அஸ்வனி பார்கவா ஒப்பந்த உத்தரவை வழங்க, ஏரோஸ்பேஸ் எஞ்சினியர்ஸ் நிர்வாக அதிகாரி சுந்தரம் அதனைப் பெற்றுக்கொண்டார்.
ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனம்,150 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் 1 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய உற்பத்தி வசதியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சேலத்தில் அமைந்துள்ள உற்பத்திக் கூடத்தை விரிவுபடுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.